சட்ட அறிவை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக கொடுப்பதாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் கருணாநிதி” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளி விழா கல்வெட்டை திறந்துவைத்து, வெள்ளி விழா மலரை வெளியிட்டார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “1997-ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக் இருந்த தலைவர் கலைஞரால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகம்தான், இந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இதனை அன்றைக்குத் தொடங்கிய முதல்வர் கலைஞருடைய மகனான நான், முதல்வராக இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

திமுக ஆட்சியிலே இந்த வெள்ளி விழா நடந்து கொண்டிருக்கிறது. இது அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான். அந்தச் சிறப்பு நமது தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வகையில், அந்தப் பணியை நிறைவேற்றித் தந்தவர். 1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் . 1997-ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

இன்னொரு முக்கியமான செய்தியை உங்களிடத்தில் நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது, அப்போது நடந்த நிகழ்வை, நான் இங்கு உங்கள் அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களது இல்லம் கோபாலபுரத்தில் இருக்கிறது. முதல்வராக இருந்தபோது அந்த இல்லத்தில் தான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த கோபாலபுரம் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தத் தெருவில் நான்கைந்து கார்கள் கூட நிற்க இடம் இருக்காது, ஏனென்றால், அது நெருக்கமான இடம், போக்குவரத்துக்கு இடையூறாகிவிடும்.

அப்படிப்பட்ட முதல்வராக இருக்கக்கூடிய கலைஞருக்கு, வசதியாக இல்லம் இருக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளெல்லாம் முடிவு செய்து, அரசின் சார்பில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளெல்லாம் செய்து அந்த இடத்தை முதல்வராக இருக்கும் கலைஞருக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். கலைஞரிடத்தில் சென்று இந்த ஆலோசனையைச் சொன்னார்கள். அந்தக் காலக்கட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இடம் தேடப்பட்டு வந்தது.

உடனடியாக பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கு உடனடியாக கட்டடம் கட்டுவது என்றால் காலம் ஆகும், நேரமாகும், காலம் விரயம் ஆகும். எனவே, கலைஞர் உடனே ஒரு அறிவிப்பு செய்தார். தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து, அன்றைக்கு உத்தரவிட்டவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் . தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் துவங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர். 40 பேருடன் துவக்கப்பட்ட பல்கலை தற்போது 4 ஆயிரம் பேருடன் செயல்படுகிறது. சட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சட்ட அறிவை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்த வேண்டும். நீதிக்கு வெற்றி தேடி தரும் வழக்கறிஞர்களாக செயல்பட வேண்டும். சட்ட விதி மட்டுமின்ற சமூக நதியை காப்பாற்றும் வகையில் சட்ட பல்கலை மாணவர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − 25 =