சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைப்பு

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் முக.ஸ்டாலின் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அப்போது உடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இருந்தார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

மேலும் விழா நடைபெற்ற தலைமைச் செயலகத்தை சுற்றி, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமைச்செயலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டார். கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜார்ஜ் கோட்டை வந்தடைந்தார்.  ஜார்ஜ் கோட்டைக்கு வந்த ஜனாதிபதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, தமிழ் மக்களின் சார்பாக குடியரசுத் தலைவரை வரவேற்கிறேன் என  வரவேற்புரையாற்றினார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு நினைவுப் பரிசுகளை போர்த்தி வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் 16வது தலைவராக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். மேலும் அவரது படத்தின் கீழ் “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.