சட்டசபையில் இன்று நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,கொள்கை விளக்க குறிப்பில், அசத்தலான அறிவிப்புகள்

தமிழக சட்டசபையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ளவை பின்வருமாறு, வண்டலூர் கிளாம்பாக்கத்தில் ரூ. 393 கோடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் 2022 மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும். 2022 மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்கும். திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 2022 அக்டோபர் முதல் செயல்படும். தமிழகத்தின் மேற்கு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் 2022 முதல் குத்தம்பாக்கத்தில் இருந்து செல்லும்.

நலிவடைந்த 262 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் கலைக்கப்படும். நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல்,சேலம், நாமக்கல்லில் ரூ. 950 கோடியில் 6000 புதிய குடியிருப்புகளை கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.உலக வங்கி நிதியில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம், இரவு நேர தங்கும் விடுதி ரூ2, கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 11,497 மனைகள் விற்பனைக்கு வர உள்ளன.8061 குடியிருப்புகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது.விற்பனையாகாத அலகுகளை விற்பதற்கு வருங்காலத்தில் ஒரு விற்பனைப் பிரிவு உருவாக்கப்படும்.

சென்னை நந்தனத்தில் வர்த்தக மையத்தை உருவாக்க முன்மொழிந்து நிர்வாக காரணத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை .வர்த்தகம் மையம் அமைப்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறு இருந்தால் செயல்படுத்தப்படும்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் எதிர்கால வணிகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முன்மொழிந்து விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் திட்டத்தை முன்னெடுக்க முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.