கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளத்தை கடத்த முயன்ற 18 லாரிகள் சிறைபிடிப்பு.

கோவையில் இருந்து கேரளாவுக்கு அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்றதாக 18 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.கோவை மதுக்கரை, பெரியகுயிலி, தேக்காணி, செட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து பெரிய சைஸ் கருங்கற்கள், சிறிய ஜல்லிகற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

இவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுமதியின்றி எடுத்து செல்லப்படுகின்றன. உரிமம் இருந்தாலும், தமிழக பதிவு எண் உடைய லாரிகள் அதிகபட்சம், 2 டன் அளவுக்கு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த அளவை மீறி எடுத்து சென்றால், ஒவ்வொரு டன்னுக்கும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேநேரம், கேரளா பதிவு எண் உடைய லாரிகளில் கோவையில் இருந்து ஒவ்வொரு லாரியிலும் குறைந்தது 10 முதல் 20 டன் வரை கற்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதை கனிமவளத்துறை மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களாக கனிமவள பொருட்களை எடுத்து சென்ற கேரளா பதிவு எண் கொண்ட 18 லாரிகளை தமிழக லாரி டிரைவர்கள் சிறைபிடித்தனர். இவை செட்டிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து, கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் செட்டிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து தகுந்த உரிமத்துடன் தான் பொருட்களை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இறுதியில் 18 லாரிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்து விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =