கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் – சட்டத்துறை அமைச்சர்

கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஒருவார கால தொடர் பிரச்சாரத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உடனிருந்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில்:- கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைக்கழுவுதல் போன்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பதே அரசின் தலையாய பணி என்பதை உணர்ந்து தமிழக அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தினை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் உரிய முறையில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, அதன் பின்னர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி மற்றும் நைனாமுகமது, பாலு, இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.