கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:- பலங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஜமீன்தார்கள் மற்றும் பண வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களை கோவில்களுக்கு தானமாக வழங்கினர். தானமாக வழங்கிய கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆகையால் சிக்கல்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு பட்டா வழங்குவதற்கான தடை ஆணை திரும்பப் பெற்றவுடன் கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்படும். அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்த (மொட்டை அடிக்க) இனி கட்டணம் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முடி காணிக்கை செலுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படாது. மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை. வடபழனி முருகன் கோவிலில் இரண்டு இடத்தில் ரூ.2 கோடி செலவில் பன்னோக்கு கட்டடம் கட்டப்படும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்து அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை கூறியுள்ளார்.