சிஎம்டிஏ சார்பில் கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட்டில் உள்ள, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மலர் வணிகப் பகுதியில் ஏற்கெனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் பணியாளர்கள் தங்கும் விடுதி, உணவு தானிய வணிகப் பகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத்துக்கு உட்படுத்தாமல் உள்ள கடைகளின் நிலை உள்ளிட்டவை குறித்தும், திறந்த வெளி பகுதிக்கென (ஓஎஸ்ஆர்) ஒதுக்கப்பட்ட இடங்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டோம்.
வரும் பிப்ரவரி மாதத்துக்குள் கோயம்பேடுமொத்த விற்பனை அங்காடியில் முழு ஆய்வையும் மேற்கொண்டு, இந்த அங்காடிவளாகத்தை மேம்படுத்தும் பணிகளை அனைவரின் ஒத்துழைப்போடு மேற்கொள்வோம். இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்புச் சந்தை வணிக வாகனம் நிறுத்துமிடத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அங்காடி நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு அங்காடி கழிவுகளைப் பயன்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, பிரபாகரராஜா எம்எல்ஏ, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் எம்.லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.