கோடநாடு வழக்கு விவகாரம் “என் உயிருக்கு ஆபத்து” கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால்

கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் தடுக்கும் முயற்சி நடந்து வருவதாக, கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோடநாடு கொலை வழக்கு பற்றி 2017-ம் ஆண்டில் இருந்தே தவறுகளை சுட்டிக்காட்டி கூறிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் யாரும் சொல்லிக் கொடுத்து பேசவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அனுப்பிய நபர், ‘கோடநாடு வழக்கு தொடர்பாக அவரை காட்டிக் கொடுக்க வேண்டாம், பணம் கொடுக்கிறேன்’ என்று பேரம் பேசினார். பணத்துக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. கோடநாட்டில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வைத்து, கோவையில் சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி அலுவலகத்தில் உடனடியாக ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. கோடநாடு வழக்கு தொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரிகள் விலை போய்விட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியால் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. கோவையில் சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி அனைத்து உண்மைகளும் சொல்கிறேன்.மேலும், புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன். எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. நான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதால், எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் அச்சப்படுகிறார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும், கருத்து வேறுபாடும் எங்களுக்குள் கிடையாது. எனது மனைவி வைத்து புகார் கொடுப்பதால், என்னை காவல் துறை கைது செய்துவிடும். பின்னர், கோடநாடு வழக்கில் விசாரணையில் நான் ஆஜராவது தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படும்” என்று அவர் கூறினார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனபாலின் மீது புகார் அளிக்க வந்த அவரது மனைவி தாமரைச்செல்வி கூறியது: ”கோடநாடு விவகாரம் குறித்து பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியும், எனது கணவர் தனபால் கேட்க மறுக்கிறார். பேட்டி கொடுக்கக் கூடாது என கூறியதால், அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இது தொடர்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும், எஸ்பி அலுவலகத்திலும் கணவர் தனபால் மீது புகார் அளித்துள்ளேன். கோடநாடு வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் கூறுவதில் உண்மையில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலோ பேசி வருகிறார்.

இதுபோன்று வீட்டில் இதுவரை அவர் எதுவும் பேசவில்லை. ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக எனது கணவர் தனபால் அவரிடம் பேசாமல் இருந்தார். எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எனது கணவர் தனபாலுடன் இருந்தால் என் உயிருக்கு ஆபத்துள்ளது என அச்சமாக உள்ளது. எனது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். என்னையும், குழந்தைகளையும் யாரும் மிரட்ட கிடையாது. எங்கள் வீட்டுக்கு அரசியல்கட்சியினரோ, வேறு யாருமோ வந்தது கிடையாது” என்று அவர் கூறினார்.