கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட்1-ல் ஆர்ப்பாட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆக.1ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கோடநாடு பண்ணை பங்களா. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கோடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ணபகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது.

மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்ட நிலையில், இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சட்டமன்றம் தொடங்கி, பொது வெளியிலும், குறிப்பாக 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இச்சம்பவம் குறித்து பல சந்தேகங்களை மக்கள் முன் வைத்து பேசியவர் இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்தான் என்பதையும், ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்போம் என்று மு.க. ஸ்டாலின் மக்களிடம் வழங்கிய வாக்குறுதியையும் நாடறியும்.

அப்படி பேசியது மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையிலும் இதனை பிரதான வாக்குறுதியாக திமுக அச்சிட்டு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களை தொடும் நிலையில், இன்று வரை இந்த வழக்கின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை, உண்மைக் குற்றவாளிகளும், அதற்கு காரணமான கிரிமினல் பேர்வழிகளும் தண்டிக்கப்படவும் இல்லை என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கடுமையான விமர்சனங்களையும், ஆட்சி நடத்தும் திமுகவின் மீதும் கடுமையான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்திந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், இதனை ஆளும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது அனைவரின் கடமையாகும்.

ஆளும் திமுக அரசு கூடுதல் கவனமும், அதி முக்கியத்துவமும் கொடுக்காமல் தூங்கி வழிவதைக் கண்டித்தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திரரவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01-08-2023 அன்று காலை 10-30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.