கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மரணமடைந்தார். இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொரட்டூர் காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் மனைவி மாரிமுத்து என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு இவரது உறவினர்களான வேலாயுதம் மகன் காசி (60) என்பவரும், பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன்கள் பக்கிரி (60), பாவாடை (57), கஜேந்திரன் (52) மற்றும் அர்ஜுனன் மகன் குபேந்திரன் (35) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது துக்க நிகழ்ச்சியில் காசிக்கும் , சாமிக்கண்ணு மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி சண்டையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் காசி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் துறையினர் சாமிக்கண்ணு மகன்கள் மூன்று பேர் மற்றும் அர்ஜுனன் மகன் குபேந்திரன் உள்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை முடித்து, இறுதி அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 13 ஆம் தேதி விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் எதிரிகள் நால்வரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து நான்கு பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பாராட்டுகளை தெரிவித்தார்.