கொரோனா 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து அந்த குழு செயல்முறை எதையும் மத்திய அரசுக்கு அளிக்காத நிலையில் 3வது டோஸ் பூஸ்டர் இந்திய அளவில் எங்கும் தொடங்கவில்லை.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால், கேரள-தமிழக எல்லையோர மாவட்டங்களில் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, வருகிற 12ம் தேதி எல்லையோர 9 மாவட்டங்களிலும் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி போட்டாலே 97.5 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது. 2 தடுப்பூசி போட்ட பிறகு இறப்பு சதவீதம் இல்லாத நிலை உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும் இறப்பு என்பது இல்லை.
எனவே 3வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவில் இல்லை. உலகில் எங்கும் இல்லை. அப்படி ஏதாவது 3வது டோஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் முதலில் அந்த பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.