கொரோனா 3ம் அலை : குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா 3ம் அலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது.

அதன்படி, அந்த குழுவின் செயலாளராக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் நிர்ணயிக்கப்பட்டுள்ளார். மேலும் உறுப்பினர்களாக தேசிய சுகாதார சிறப்பு திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கழக நிர்வாக இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், கிராமப்புற சுகாதார பணிகள் இயக்குனர், பொது சுகாதார மருத்துவக் கழக இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், இந்திய குழந்தைகள் நல தமிழக தலைவர், செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் நல செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.