உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்களின்றி இன்று தொடங்கவுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் ஆலயம் வருவதை தவிர்க்க பேராலய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருடாவருடம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி திருவிழாவில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவானது இன்று கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் நிலையில், இதில் பங்கேற்க பக்தர்கள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமாக நடைபெறும் அனைத்து திருப்பலிகளும் அனைத்து மொழிகளிலும் நடைபெறும் என்றும், செப்டம்பர் 7ம் தேதி பக்தர்கள் இல்லாமல் பெரிய தேர் பவனி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
பேராலய திருவிழாவை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யபட்டு இருப்பதாகவும், பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே மாதாவை தரிசிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும் என்று கூறியுள்ள அதிபர் பிரபாகர், தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பாதையாத்திரை பக்தர்கள் ஆலயம் வருவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.