கொரோனா எச்சரிக்கை கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நோக்கத்துடன், கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள் தொடர்பாக, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இன்று (ஆக.,3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் கலெக்டர் சமீரன் அறிவித்தார்.

புதிய கட்டுப்பாடுகள் வருமாறு:அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படும். மீன், இறைச்சிக்கடைகள், காலை 6:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை; டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப் படுகிறது. அனைத்து மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டுச்சந்தை ஆக.,4 முதல் இயங்க தடை விதிக்கப் படுகிறது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.