கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் மேம்பாட்டு பணி செய்து வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவ மாணவியரின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை குறித்தும் , அதற்கான உகந்த சூழல் உருவாக்குதல் குறித்தும் பயிற்சிகள் அளிப்பதற்கு வழிகாட்டுதலையும் கல்வித்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அளித்து வருகிறது.
தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செய்து வருகிறது . இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வையும் வேன் பிரச்சாரம் , கைப்பிரதிகள் , சுவரொட்டிகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது .
திருவள்ளூர் , பூண்டி ஒன்றியத்தை சார்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், கொரோனாவால் தாய் , தந்தையரை இழந்த வாழும் குடும்பங்கள் , மருத்துவ சிகிச்சை பெற்ற குடும்பங்கள் , விதவைகள் , கணவரால் கைவிடப்பட்டோர் , ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள் , தீராத வியாதியினால் அவதியுறும் நலிவடைந்த 1000 குடும்பங்களுக்கு ஜெர்மன் அரசு இந்தோ ஜெர்மன் ஒத்துழைப்பு தொண்டு நிறுவனம் ( டிஸ் ) நிதி உதவியுடன் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் நேற்று வழங்கியது .
திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் பயனாளிகளுக்கு உணவு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மேலும் இந்நிகழ்ச்சியில் ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசனா சத்யா , ஒன்றிய கவுன்சிலர்கள் , ஐ.ஆர்.சி.டி.எஸ் செயலாளர் ஸ்டீபன் , திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன் , பழனி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.