கேரளாவில் கொரோனா அச்சம் காரணமாக, வழக்கமான உற்சாகமின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகைகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள புராணப்படி மக்களைச் சந்திக்க வரும் மாவலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாப்படுகிறது. வழக்கமாக வண்ணமயமான அத்தப்பூ கோலம், கைகொட்டிக் களி எனப்படும் பாரம்பரிய நடனம், உற்சாகமான ஊஞ்சல் விளையாட்டுகள் என ஓணம் பண்டிகை களைகட்டும்.
ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில், ஓணம் கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருவனந்தபுரத்தில் பழமையான பத்மநாபசுவாமி கோயில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான பழவங்காடி விநாயகர் கோயில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.