கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது – எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்காமல், ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3ம் நாள் விவாதம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச அனுமதி கேட்டதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அவர் பேச அனுமதி அளித்தார்.

அப்போது, நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் போலீசார் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் முக.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:- எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியாக எந்த தலையீடும் இல்லை. ஆகையால் யாரும் அச்சப்பட தேவையில்லை. திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், அதிமுகவினரை வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

பின்னர் பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக, பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து தர்ணாவின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வப்போது கொடநாட்டுக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு, அந்த கொடநாடு வீட்டில் சில கொள்ளை கும்பல், சயன் மற்றும் அவரது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதா தங்கியிருந்த இல்லத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது காவலாளியை தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.

கொலை, கொள்ளை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் இந்த சூழலில், திமுக வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. ரகசிய வாக்குமூலம் பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் என்னையும், அதிமுகவினர் சிலரையும் சேர்த்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கு முடியும் நிலையில், 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் இந்த சூழலில் திமுக வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அச்சுறுத்த முயற்சிக்கிறது. அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. கொடநாடு குற்றவாளிகளை காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயற்சித்ததை யாரும் மறக்க முடியாது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் 3 முறை தெரிவித்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், வேண்டுமென்றே மறுவிசாரணையை திமுக கோரியது. ஆனால், நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. ஸ்டாலின் அரசு அதிமுக மீது வீண் பழி சுமத்தபார்க்கிறது. அதிமுக எதற்கும் அஞ்சியது கிடையாது. பல எதிர்ப்புகளை கடந்துவந்த கட்சி அதிமுக. அதேபோல எல்லா தடைகளையும் தகர்ப்போம்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அதனை மறைக்க இப்படியான அரசியல் நாடகத்தை திமுக நடத்தி வருகிறது. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே நீதிமன்ற விசாரணையில் சயன் எதுவும் கூறாத நிலையில் மீண்டும் போலீஸ் விசாரணை ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எதிர்க்கட்சி துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து இன்று ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார். அதற்கு வாய்ப்பு தராமல், என்ன சொல்கிறார் என்று கேட்காமல் அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர். ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பொய் வழக்குகளை போட்டு அதிமுகவை செயல்படவிடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். எவ்வித வழக்குகளுக்கும் அதிமுக அஞ்சாது. ஏனென்றால் அது பொய்யான வழக்கு என்று மக்களுக்கு தெரியும். எங்களுடைய ஜனநாயக கடமைகளை நாங்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறோம். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்றும் நாளையும் சட்டமன்றத்தை புறக்கணிக்கிறோம் என்றார்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − = 51

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: