
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியான ரவி என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆக.27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் தனக்கு சில நபர்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், இதனால், இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீலகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், கொடநாடு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு, காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஆனால் மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு விரிவான விசாரணையை காவல்துறை நடத்துகின்றனர். இது சட்டத்திற்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில், ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்யப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும், மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறை தரப்பில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை. மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நெருக்கமானவர். காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதைப் பொறுத்து சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
மேலும் வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை. தற்போதுதான் முழுமையாக விசாரிக்கப்படுகிறது என விளக்கம் அளித்தனர்.
அதன்படி, ரவியை விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வேண்டுமானால் அவர், அவரது வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் ஆஜராகலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற ஆக.27ம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.