கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, இபிஎஸ், சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த கொடநாடு வீட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. நள்ளிரவில் பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஆவணங்களை கொள்ளையடித்து விட்டதாக பதிவான வழக்கின்பேரில் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரையும் விசாரிக்கவேண்டும் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடராஜனை விசாரிக்க மட்டும் அனுமதி வழங்கி, மற்றவர்களை விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறியது.
இந்நிலையில் இதனை எதிர்த்து தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை; முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.