கையில் ஒற்றை செங்கல் உடன் திமுக கூட்டணி கட்சிகள் “எய்ம்ஸ் எங்கே?”  தொடர் முழக்கப் போராட்டம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது வரை முழுமையான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று (ஜன.24) தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதைக் கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது, திமுக கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை வைத்தபடி ‘எய்ம்ஸ் எங்கே?’ என்று முழங்கினர். இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி திமுக – பாஜக அரசியல் மோதலால் தாமதமாகி வருவாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 64