
நாட்டில் 1991 போன்று 2021ல் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாஜக ஆட்சியில் ஜிடிபி உயர்ந்து வருவதாக பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரியும் கூறிவருகின்றனர். பிரதமர், நிதி அமைச்சர் குறிப்பிடும் ஜிடிபி உயர்வு என்பது கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜிடிபி என குறிப்பிடுகிறார்கள் என்று கருதினேன். ஜிடிபி என பிரதமர், நிதி அமைச்சர் குறிப்பிட்டது கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வு என்பது பின்னர்தான் புரிந்தது என மோடி அரசை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது? பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014க்குப் பிறகு பெட்ரோல் 42 சதவீதமும், டீசல் 55 சதவீதமும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபக்கம் பணமதிப்பிழப்பையும், மறுபக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் அளிக்கின்றன.
விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின்மூலம் மத்திய பாஜக அரசு இதுவரை என்ன முன்னேற்றத்தை கண்டுள்ளது? எரிபொருள் விலை உயர்வுக்கு தற்போதைய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்.
1991 போன்று 2021ல் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. வணிக அளவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.