கேராளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு : தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கேராளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் 2வது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,38,614ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 20,961ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்று பாதிப்புடன் 2,29,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரள எல்லையையொட்டிய தமிழக, கர்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இரு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசிய அவர் கூறியிருப்பதாவது, கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, பொதுமக்கள் சரியாக கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாததால், கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை ஒட்டிய நிலையிலேயே இருந்துவந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வருகிற வாரத்தில் தினசரி நோய் பாதிப்பு 40 ஆயிரமாக பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மாவட்டங்களான மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. ஆகையால், கேரள எல்லையையொட்டிய தமிழக, கர்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியையும், எல்லையில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.