கேரளாவில் 11-வது நாளாக மக்களை சந்தித்த ராகுல் காந்தி

ராகுல்காந்தியின் 11-வது நாள் பாதயாத்திரை சென்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11-ந் தேதி நுழைந்தது. 15-ந் தேதி அவரது பாதயாத்திரைக்கு ஓய்வு விடப்பட்டது. அதன்பின்பு சிவகிரி மடம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்ற ராகுல் காந்தி, நேற்று முன்தினம் மாதா அமிர்ந்தானந்த மயி தேவியையும் சந்தித்தார். இந்த நிலையில், கேரளாவில் இன்று ராகுல்காந்தியின் 11-வது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய பாதயாத்திரையில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த பாதயாத்திரை காலை 10 மணிக்கு தொட்டப்பள்ளி ஒத்தபனா பகுதியில் நிறைவடைந்தது. அங்குள்ள ஸ்ரீபகவதி கோவிலில் ஓய்வெடுத்த பாதயாத்திரை குழுவினர் பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். பாதயாத்திரை இன்று இரவு ஆலப்புழா, புன்னப்புரா பகுதியில் நிறைவடைகிறது. அங்கு ஆரவகடவு பகுதியில் ராகுல் காந்தி தங்குகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். சாலையின் இருபுறமும் ராகுல் காந்தியை வரவேற்று பதாகைகள் ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 1