கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு முடிவு: கொரோனா தீவிரமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் கொரோனா பரவலுக்கு ஏற்ப சனி, ஞாயிறு கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக ஞாயிறு மட்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அன்று அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டன.
இதனிடையே சுதந்திர தினம், ஓணம் ஆகியவற்றையொட்டி ஆக., 15, 22ல் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தேவையின்றி இயங்கும் வாகனங்கள், நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.