கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு சென்னை விமான நிலையத்திலேயே உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரும் 5ம் தேதி முதல் பாதிப்பு அதிகம் உள்ள கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை அல்லது இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழகத்திற்கு வரலாம் என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலைத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது. கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு வருவதற்கு 13 இடங்கள் உள்ளன. அந்த பகுதிகள் 5ம் தேதி அதிகாலை முதல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.