கேரளாவில் இனி முழு ஊரடங்கு தேவையில்லை முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முழு ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் உள்ளது. தினசரி சராசரியாக 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்றும் புதிதாக 29,322 பேருக்கு தொற்று பரவியுள்ளது. தொற்று சதவீதம் 17.91 ஆகும். 131 பேர் மரணடைந்தனர். இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசு சார்பில் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்வர் பினராயி விஜயன் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இனி முழு ஊரடங்கு அமல்படுத்த அவசியமில்லை. முழு ஊரடங்கால் மாநிலத்தின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியே சென்றால் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் சொந்த செலவில் தனி முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்றும் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. அதில் முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு மாற்றாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − = 71