கேரளாவில் பிளஸ்1 மாணவனை தாக்கிய 11 சக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பை புறக்கணித்து விட்டு வெளியே சென்றது ஆசிரியர் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கவே, சக மாணவன் ஷமில் தான் ஆசிரியரிடம் புகார் சொன்னதாக அந்த மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஷமிலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் நடத்திய மாணவர்கள் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.