
13 அதிகாரிகளைக் கொண்ட மாநில பணிக்குழுவை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை படி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் கூடுதல் இயக்குநர், குழந்தைகளுக்கான கொரோனா தொற்று கவனிப்பு தொடர்பாக மாநில அளவில் பணிக்குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கான மாநில குழுவின் துணைக்குழுவாகவும் செயல்பட வேண்டும் அந்த வகையில், குழந்தைகளுக்கான கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தொடர்பாக மாநில அளவிலான பணிக்குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழு தொற்று தடுப்பு, சிகிச்சை, ஆய்வு தகவல்கள் மற்றும் அதன் தொடர்புடைய ஆலோசனைகளை அரசுக்கு அளிக்கும்.
இந்த பணிக்குழுவின் தலைவராக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் இருப்பார். குழந்தைகள் நலன் நிறுவனம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர், இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் ,பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் குழந்தைகள் நல துறைத் தலைவர்கள், இந்திய குழந்தைகள் நலன் அகடமியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் மற்றும் செயலாளர், திருச்சி மாவட்ட பிரிவு செயலாளர் டாக்டர் ஏ.தங்கவேலு ஆகிய 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.