குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மன்சுக் மாண்டவியா, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கூறினார். குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ZYDUS CADILA மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான முடிவுகள் அடுத்த மாதத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார். பாரத் பயாடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையோருக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை செப்டம்பரில் தொடங்கும் என அறிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் மத்திய அரசும் ZYDUS CADILA உருவாக்கி வரும் தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு விரைவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்நிறுவனத்தின் சைகோவ் – டி தடுப்பூசியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.