குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் புலிகேசி மனைவி ராதா(45). ஆவண எழுத்தரான இவர், 2019-ல் திருவெறும்பூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான மனையை, போலி ஆவணங்கள் மூலம் அதேபகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சுந்தரம் அளித்த புகாரின்பேரில், குமார்,ஆவண எழுத்தர் ராதா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன் ராதாவிடம் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப் பத்திரிகையில் ராதாவின் பெயரைச் சேர்க்காமல் இருக்க, டிஎஸ்பி ஆல்பர்ட் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதா, இதுகுறித்து மாவட்ட லஞ்சஒழிப்புப் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் ஆலோசனைபடி, மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் இருந்த டிஎஸ்பி ஆல்பர்ட்டிடம் நேற்று ரூ.1 லட்சத்தை ராதா கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் போலீஸார், டிஎஸ்பி ஆல்பர்ட்டை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட டிஎஸ்பி ஆல்பர்ட், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.