குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறையில் பெண்கள் இருக்க வேண்டும்; முதல்வர்

“திமுக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்பி, டிஐஜி, ஐஜி, காவல் துறை கூடுதல் இயக்குநர், காவல் துறை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள்” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற, தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து,

ரோல் கால் என்ற காவல் வருகை அணிவகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் உள்ளிட்ட 9 அறிவிப்புகளை பெண் காவலர்களுக்காக வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்: “திமுக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்பி, டிஐஜி, ஐஜி, காவல்துறை கூடுதல் இயக்குநர், காவல் துறை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர். தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவில், அவரது மகனான நான் முதல்வராக வந்து கலந்துகொள்வது எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெரும் பெருமையாக, பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

பெண்கள் இன்றைக்குக் காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலுமே அதாவது, சட்டம் – ஒழுங்கு குற்றப்பிரிவு, ரயில்வே துறை, சிபிசிஐடி, போக்குவரத்து, உளவுத் துறை. லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்றப் பிரிவு, கமாண்டோ படை – ஏன்? முதல்வர் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்தான். அதாவது, சட்டம் – ஒழுங்குப் பாதுகாப்பில் 37 விழுக்காடு பெண் காவல் ஆய்வாளர்கள் திறம்பட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐ.நா அவை, மகளிர் தினத்தை உலக அளவில், “புதுமைகளும், தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்” (DigitALL: Innovation and Technology for gender equality) என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.

நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பமான நஃபிஸ் (NAFIS) மற்றும் ஃபேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக விரல்ரேகைப் பிரிவில், 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது.குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − 75 =