கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வடமாநில தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் யாதவ் (28) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராகேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது சக தொழிலாளி நண்பர்களான சூரஜ் குமார் (28), ராஜேஷ்குமார் (27) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை யார் ஓட்டிச்சென்றது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராகேஷ் குமார் யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் மூலம் தேடிவருகின்றனர்.