கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோவில் தெருலைச் சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41). இவர், வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணத்தையும், தனது வீட்டையும், உறவினர்களிடம் கொடுத்த வைத்திருந்ததை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவரது உறவினர்கள், பணத்தையும், வீட்டையும் இல்லை எனக் கூறியதால், கும்பகோணம் மேற்கு மற்றும் தாலுக்கா காவல் நிலையம் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அண்மையில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தனது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செந்தாமரை தனது பிரச்சினை குறித்து நேரடியாக நீதிமன்றத்தில் கூறுவதற்காக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, இதனையறிந்த போலீஸார், அவரை மறித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தாமரை சாலையில் நடுவில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவளித்தனர்.
இதற்கிடையில், சோழபுரம் காவல் நிலையத்திலிருந்து கும்பகோணம் நீதிமன்ற பணிக்காக வந்த பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, செந்தாமரையை சமாதானம் செய்ய முயன்ற போது, அவரை கீழே தள்ளி விட்டு, தகாத வார்த்தை பேசி நீதிமன்றத்திற்குள் செல்ல முயற்சி மேற்கொண்டார். இதில் பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த கிழக்கு போலீஸார், அந்த இடத்திற்கு சென்று, செந்தாமரையை கைது செய்து, பொது போக்குவரத்தை தடை செய்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து போலீஸார் திருவாரூர் சிறையிலடைத்தனர்.