கும்பகோணத்தில் கட்டப்படும் திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் பிப்ரவரி 2 வரை யாரும் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வம் (54). இவருக்கு கும்பகோணம் புதிய ரயில் நிலையம் சாலையில் சொந்தமாக மனை உள்ளது. இந்த மனையின் வடபுறத்தில் திமுகவிற்கு சொந்தமான இடத்தில் மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் மற்றும் சிலர், இவரது சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி, அத்துமீறி நுழைந்து அங்கு கட்டிடம் கட்டுவதற்கான பள்ளம் தோண்டினர்.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. இது குறித்து இணையதளம் மூலம் கடந்த 9-ம் தேதி காவல் துறைக்கு புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால், செல்வம், கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, வரும் பிப்ரவரி 2-ம் தேதி வரை அந்த இடத்திற்குள் யாரும் நுழைய கூடாது என தடை உத்தரவிட்டார். இதனால் கும்பகோணம் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும், தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கற்கல்லை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.