குடிநீரில் மனித மலத்தை கலந்துள்ளது மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது கே.பாலகிருஷ்ணன் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டடியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து காவேரிநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு  பாலகிருஷ்ணன் பேசுகையில்:

மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கிய கொடூரமான சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நாகரிகமான உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்துகிறது. மலத்தை காலில் மிதித்துவிட்டால் பாம்பை மிதித்துவிட்டதைப்போல பதறிப்போகிறோம். பாதையில் மலத்தைப் பார்த்தாலே சங்கடம் ஏற்படுகிறது. மனிதன் செய்கிற காரியமா இது. முழுப் பைத்தியக்காரன்கூட இச்செயலைச் செய்ய மாட்டான்.

இன்றைக்கு வேங்கைவயல் கிராமத்தை உலகமே அருவருப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஒரு சிலர் செய்த இந்தத் தவற்றால் இந்தக் கிராமமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் ஊரின் கறையைப் போக்க வேண்டுமென்றால் உண்மையான குற்றாவாளிகளை கண்டுபிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். பட்டியல் இன மக்களுக்காக ஏராளமான அமைப்புகள் வேலை செய்கின்றன. அவர்கள் முழுக்க முழுக்க பட்டியல் இன மக்களையே திரட்டி அவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஆனால்.  பட்டியலின மக்களுக்காக அனைத்து சமூத்தை சேர்ந்தவர்களையும் ஒன்றினைத்துப் போராடும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. எங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்படுவது எந்த சாதி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை எம்எல்ஏ, நாகராஜன், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் சுப்யையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜனார்த்தன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர்,ஸ்ரீதர்,சண்முகம், கண்ண்ம்மாள், அன்புமணவாளன், நாகராஜன்,அன்பழகன், மதியழகன், துரை.நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 − 38 =