
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகோட்டை அருகே உள்ள சிதம்பரம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் என்ற 24 வயது இளைஞர் சமையல் பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் சமையல் பணி செய்து கொண்டிருந்த பொழுது சமையல் கூடத்தில் உள்ள எக்ஸாஸ்டர் ஃபேனில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அந்த ஒயர் ஜன்னலில் இருந்துள்ளது. இதை அறியாத தர்மராஜ் எதிர்பாராதவிதமாக அந்த ஜன்னலில் கை வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரை சக ஊழியர்கள் அவரது உடலை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண மண்டபத்தை திருமண நிகழ்வுக்கு வாடகைக்கு விடும் பொழுது அனைத்து பராமரிப்பு பணிகளும் செய்து விட வேண்டும் ஆனால் இந்த திருமண மண்டபத்தில் முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் சமையல் செய்ய சென்ற இளைஞரின் உயிர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.