கிருஷ்ணகிரி அருகே விவசாயத்தை காக்க தஎன்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தையொட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம்  சுமார் 450 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் காலம் காலமாக கும்மனூர், அம்மனேரி, கூளியம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தென்பெண்னை ஆற்றினை கடந்து சென்றுதான் விவசாயம் செய்ய வேண்டும். ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் காலத்தில் ஆற்றினை கடந்து செல்லமுடியாத நிலை காலம்காலமாக நீடித்து வருகிறது. விவசாயிகள் நெற்பயிர்களை தலையில் சுமந்தவாறு கழுத்தளவு தண்ணீரில் நீந்தியபடி அக்கரைக்கு சென்று நாற்று நடும்பணிகளில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஆற்றை கடந்து செல்லும்போது தண்ணீர் அடித்து சென்றதில் ஏராளமானவர்கள் பலியாகி வருவதால் விவசாயம் செய்ய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்து விவசாய நிலங்களை விட்டுவிட்டு வேறு இடங்களில் குடிபோகும் நிலையும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து கும்மனூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில், கும்மனூர் கிராமத்தையொட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அக்கரைப்பகுதியில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுத் தோறும் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயத்திற்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுப்பொருள்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லமுடியாத நிலை உள்ளதால் ஆற்றில் இறங்கி தான் கொண்டு செல்லவேண்டும். எந்த நேரமும் ஆற்றில் இறங்கி செல்லமுடியாது. கோடைகாலத்தில் மட்டுமே ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் வரும். மற்ற நாட்களில் கழுத்துக்கு மேல் தண்ணீர் வந்தவண்ணம் இருக்கும். இந்த நேரத்தில் பயிருக்கு தேவையான உரங்கள் கொண்டு செல்லமுடியாது.

தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் நாற்று நடவு செய்ய விவசாயிகள் ஆபத்தான நிலையில் தலையில் சுமந்தவாறும், லாரி டயர் டியூப் மூலமாகவும் எடுத்து செல்கிறனர். மேலும் நெல் அறுவடை காலங்களிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆற்றினை கடந்து செல்லும்போது பலர் பலியாகி உள்ளனர். இதனால் பலர் நிலத்தினை விற்றுவிட்டு வேறு கிராமங்களுக்கும் குடிபெயர்ந்து வருகின்றனர்.

ஆகையால் இனியாவது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி விவசாயத்தினை காக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.