கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்: தமிழக அரசு உத்தரவு

கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரிவசூல் நடக்கிறது. வளர்ந்த ஊராட்சிகளில் மட்டும், கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது. வரி வருவாயை, வங்கி கணக்கு வாயிலாக கையாள வசதியாக, ‘ஆன்லைன்’ வரிவசூல் நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. கணினிமயமாக்கப்படுவதன் காரணமாக மக்கள் சேவைகள், மக்கள் தேவைகளை விரைவாக செய்து  முடிக்க முடிகிறது. மேலும், அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பினும் இன்னமும் கணினிப் பயன்பாடு 100 சதவீதத்தை எட்டவில்லை.

தமிழ்நாடு முழுவதும் 12,000-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தி வருகின்றன. தற்போது, நேரில் சென்று இந்த வரிகளை செலுத்தும் சூழல் உள்ளது. இந்தநிலையில், கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் வரிகளை செலுத்துவதற்கு tnrd.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகம் செய்துள்ளனர். வீடு, சொத்து, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவு அளித்துள்ளனர். கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும் என்றும் புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஊரக பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலருக்கே அதிகாரம் உண்டு. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 20