காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நன்றி

2023-24 ஆம் நிதியாண்டில் காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக ரூ.665.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வருக்கு மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டதாக புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் தடுப்பணையிலிருந்து 4.10 கி.மீ. தூரத்திற்கும்,   திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.3 கி.மீ. தூரத்திற்கும் ரூ.331 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மேலும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக ரூ.665.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலம் எடுப்பு பணிகளுக்கு  ரூ.554 கோடியும், கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக ரூ.111.22 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.665.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அனைவரும் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.