காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரும் தமிழக அரசின் மனு செப்.21-ல் விசாரணை உச்ச நீதிமன்றம் 

காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு வரும் செப்டம்பர் 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதனால் தமிழக அரசு, கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில்,‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு எஞ்சியிருக்கும் காலத்தில் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை உரிய காலத்தில் அமல்படுத்த கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மனுவில் கோரியிருந்தது. இந்த வழக்கை கடந்த ஆக.25-ம் தேதி விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

அன்றைய தினம், இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை செப்.6-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வுதான் விசாரித்து வருகிறது. நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விடுமுறை என்பதால், காவிரி வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் ஆஜராகி, காவிரி வழக்கை அடுத்தவாரம் விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு செய்தனர். அப்போது கர்நாடக அரசுத் தரப்பில், தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வரும் செப்டம்பர் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.