அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி.
இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப். இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நான்கு நாட்களுக்கு முன் இவர் தனியாக காலை சுமார் 06:00 மணியளவில் தனது சைக்கிளில் உடற்பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் மேற்கு சென்டினியல் பார்க்வே சாலையின் அருகில் வடக்கு டெனாயா சாலை வழியாக சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தார்.
அப்போது சற்று தொலைவில் ஹுண்டாய் காரில் அமர்ந்திருந்த 18 வயதிற்குட்பட்ட ஒரு சிறுவன் நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டே “தயாரா?” என கேட்க, அவனது நண்பர்களில் ஒருவன் “ஆமாம், அவனை பின்புறமாக தாக்கு” என பதிலளிக்க, உடனே அந்த சிறுவன் காரை வேகமாக அந்த காவல் அதிகாரி ஓட்டி செல்லும் சைக்கிளின் பின்புறத்தில் இடிக்க, அவர் தூக்கி வீசப்பட்டார். காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், “அவன் தொலைந்தான்” என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.
அவ்வழியாக சென்றவர்கள் அடிபட்டவரை காப்பாற்ற அவசர சேவைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ சேவையினர் அந்த காவல் அதிகாரியை யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதையும் தொடக்கம் முதலே படமெடுத்த அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் அந்த முழு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இறுதியாக, அந்த காரை ஓட்டிய சிறுவனையும், அவன் நண்பர்களையும் காவலில் எடுத்துள்ளனர். அச்சிறுவனின் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் எதற்காக இந்த கொலையை செய்தனர் எனும் காரணம் தற்போது வரை தெரியவில்லை. கொலையை செய்யும் முன்பு, அதனை படமாக்கவும் திட்டமிட்டு, இரக்கமின்றி காரால் சைக்கிளை மோதிய அந்த சிறுவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.