கால்நடைகளுக்கு வேகமாக பரவும் தோல் கழலை நோய்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வட மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட தோல் கழலை நோய், தமிழகத்தில் பரவுதலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜீலை 2022ம் மாதம் குஜராத் மாநிலத்தில் பல பசு மற்றும் எருமையினங்களை தோல் கழலை நோய் தாக்கியதாக பெறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில்  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  வழிகாட்டுதலுக்கிணங்க, கால்நடை பராமரிப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அறிவுரையின்படி, தோல் கழலை நோய்த் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக கீழ்க்கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வடமாநிலங்களில் பல பசு மற்றும் எருமையினங்களை தோல் கழலை நோய் தாக்கியதாக பெறப்பட்ட செய்தியின் அடிப்படையில் 01.08.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மண்டல இணை இயக்குநர்களுக்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் உயிர்பாதுகாப்பு முறைகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.  அவ்வறிவுரைகளின்படி பசு மற்றும் எருமையினங்களில் கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இத்துடன் உயிர் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் இந்நோய் பரவுவதற்குக் காரணமான பூச்சிகளை (ஈ, கொசு, உண்ணி) கட்டுப்படுத்தும் பணிகளும் கால்நடை உரிமையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பசு மற்றும் எருமையினங்களின் தோலில் கழலை போன்ற வீக்கம் உருவாகி மேலும் அதிக காய்ச்சல், கண்களில் நீர் வழிதல், மூக்கில் சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.  இந்நோய் அம்மை வகை நச்சு உயிரினால் ஏற்படும்.  இந்நோய் பரவலை தடுக்க தக்க நடவடிக்கைகள் அரசு எடுத்து குறிப்பாக இந்நோயினை ஏற்படுத்தும் பூச்சிகளை (ஈ, கொசு, உண்ணி) கட்டுப்படுத்தியும், கிருமிநாசினிகளை உரிய முறையில் பயன்படுத்தி தெளித்தும் மாட்டு கொட்டகைகள் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமுறையில் பராமரிக்க தக்க அறிவுரைகள் இந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் பெருமளவில் இல்லாதிருப்பினும் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இந்நோயை ழிகட்டுப்பாட்டில் வைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் தக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோயினைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து பசு மற்றும் எருமையினங்கள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு மாநில எல்லையோர மாவட்டங்களில் (Border Districts) தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோயுற்ற பசு மற்றும் எருமையினங்களுக்கு முறையான சிகிச்சை அளித்தும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை கடைப்பிடித்தும் இந்நோயினை குணப்படுத்தலாம். இயற்கை சிகிச்சை முறையில், தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம், மஞ்சள் அளவாக கலந்து உள்ளுக்குள் வாய்வழியாக கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.  மேலும், வெற்றிலை-10 எண்ணிக்கை, மிளகு-10 கிராம், உப்பு-10 கிராம், வெல்லம் தேவையான அளவு அரைத்து கலந்து சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுப்பதன் மூலம் மாடுகள் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.  

இது போன்று தோல் காயத்திற்கு மஞ்சள், வேப்பங் கொழுந்து, குப்பை மேனி ஒன்றாக அரைத்து புண்கள் மேல் தடவி வர பாதிப்பை தவிர்க்கலாம். இது குறித்து அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாட்டினங்களில் சுகவீனம் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை மருத்துவமனைகளை அணுகி கால்நடை மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள கால்நடை விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =