காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலானால் ‘மேன்டூஸ்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; டிச.,8, 9ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9ம் தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, 6ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், நாளை 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.,8ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் டிச.,9ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். டிச.,10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதன் காரணமாக டிச.,8 மற்றும் 9ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘மேன்டூஸ்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பெயரிடப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − 17 =