கார் இயங்காத நாள்: பைக்கில் பயணித்த அரியானா முதல்-மந்திரி

அரியானாவில் கர்னல் மாவட்டத்தில் கார் இயங்காத நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

அரியானா மாநிலத்தின் நிர்வாக தலைநகரமாக கர்னல் உள்ளது. இந்த மாவட்டத்தில் அவ்வப்போது காற்று மாசு ஏற்படுவதால் அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை ‘கார் இயங்காத நாள்’ கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, செவ்வாய்க்கிழமைகளில் சாலைகளில் கார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் மிதிவண்டியில் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை வீட்டில் இருந்து கர்னல் விமான நிலையம் வரை முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பைக்கை ஓட்டி சென்றார். விமான நிலையத்துக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.