காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் நெற்பயிர்களை மூடி சாலை அமைக்கும் அரசு அதிகாரிகள்

காரியாபட்டி அருகே எந்தவித முன்னறிவிப்புமின்றி நெற்பயிர் விளையும் விவசாய நிலத்தில் சாலை அமைக்கும் அரசு அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க அரசுக்கு விவசாய குடும்பத்தினர் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரசகுளம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 40க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 27 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர் .தற்பொழுது இவர்கள் விவசாய நிலத்தில் வண்டிப்பாதை இருப்பதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவர்களின் விவசாய நிலத்தில் சாலை அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்த விவசாய விளைநிலத்தில் நெற்பயிர்கள் நன்றாக விளைந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில் அதிகாரிகளின் இந்த செயல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பகுதியை தாண்டி அமைந்து உள்ள மணியம்பிள்ளை தோட்டம் பகுதியில் 10 வீடுகள் மட்டுமே அமைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மாற்றுப்பாதை இருப்பதாகவும் கூறும் விவசாயிகள் இங்கு சாலை அமைப்பது அரசு நிதியை வீணாக்கி தங்களின் விவசாய நிலத்தை பாழ்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலத்தில் சாலை அமைத்து வரும் அதிகாரிகளின் இந்த செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது எனவும், வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி தங்கள் விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்த விவசாய குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5