ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து நாடு திரும்பிய விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.
இதனை முன்னிட்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்டு 14ந்தேதி முதல் இதுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க அரசு மீட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி இன்று கூறும்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்திய விமான படையை சேர்ந்த சி-17 ரக விமானம் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், அந்த விமானம் இன்று காலை காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் வந்திறங்கியது. 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுக்கு கொரோனா பாதிப்புக்கான ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது.