காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்வில் பங்கேற்க இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை: அமைச்சர் சேகர்பாபு

காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஆண்டு பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. இந்தக் கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: மீட்கப்பட்டுள்ள பழமையான இடத்தை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது குறித்து திட்டமிட்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளிக்கு அருகில் 1,400 சதுர அடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள உருது பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதால் அங்கு போதுமான இடவசதி இல்லை.

எனவே, மீட்கப்பட்ட இடத்தில் உருது பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். சென்னை மாநகராட்சியின் விக்டோரியா கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும். ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையடைந்த பின் விக்டோரியா அரங்கை முதல்வர் திறந்து வைப்பார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியில் யாரையும் அனுப்பவில்லை. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. எந்த ஒரு துறை மிக சிறப்பாக செயல்படுகிறதோ அந்த துறையை தான் குறை சொல்வார்கள். தமிழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தது வலதுசாரிகளின் குரலாக கூட இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =