இன்று காங்கிரசுக்காக சிறை செல்பவர்கள், போலீசாரிடம் தங்களது பெயரை எழுதி கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். இதனால் தான் காங்கிரசால் வளர முடியவில்லை என அக்கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த குலாம் நபிஆசாத், ஜம்மு – காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். காங்.,கில் அதன் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,கடந்த மாதம் ஆகஸ்ட் 26ல் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் பா.ஜ.,வில் சேருவார் என்றும், புதிய கட்சி துவக்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுடில்லியில் இருந்து நேற்று ஜம்மு வரும் குலாம் நபி ஆசாத்துக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதோடு அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: காங்கிரஸ் சார்பில் சிறை செல்பவர்கள் பஸ்களில் செல்கின்றனர். அவர்கள், போலீஸ் டிஜிபி மற்றும் கமிஷனர்களை அழைத்து தங்களது பெயரை எழுதி கொடுத்துவிட்டு, ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் தான் காங்கிரசால் வளர முடியவில்லை. காங்கிரஸ், நமது ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கம்ப்யூட்டர்கள் மற்றும் டுவிட்டரால் உருவாக்கப்படவில்லை. கட்சியில் சிலர் எங்கள் மீது அவதூறு பரப்புகின்றனர். ஆனால், அவர்களால் கம்ப்யூடடர் மற்றும் சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடியும். இது போன்ற காரணங்களால், களத்தில் காங்கிரசை பார்க்க முடியவில்லை.
புதிதாக கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சியின் கொடி மற்றும் பெயர் குறித்து காஷ்மீர் மக்கள் முடிவு செய்வார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், ‘ஹிந்துஸ்தானி’ பெயர் சூட்டப்படும். மாநிலத்திற்கு அந்தஸ்தை பெறவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலம் பெற்றுத்தரவும் வலியுறுத்துவோம். இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.