காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் 1941-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்(80). 1972-ம் ஆண்டு உடுப்பி மாநகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1980-ம் ஆண்டு உடுப்பி மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து, 1984,1989,1991, 1996 என லோக்சபா தேர்தல்களிலும் உடுப்பியில் போட்டியிட்டு வென்றார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடுப்பியில் மொத்தம் 5 முறை ஒரே தொகுதியில் வென்று எம்.பி.யானவர். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். சோனியா காந்தி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமான இவர், நேரு குடும்பத்தால் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் இன்று  மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார்.

கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.