கவர்னர் மீதான புகாரை ஜனாதிபதியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஒப்படைத்தார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா உள்ளிட்டோர் ஜனாதிபதியை இன்று சந்தித்து மனு அளித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கூறியதாவது:- இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள், கவர்னர் உரையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படிப்பார்கள். ஆனால் கவர்னர் உரையில் உள்ள வரிகளை இப்போதைய கவர்னர் படிக்கவில்லை. பேராவை நீக்கினார். சில வரிகளை அவரே சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்தும், சில வரிகளை நீக்கியும் படித்தது தவறு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் உரையில் எது அச்சிடப்பட்டுள்ளதோ? எதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளாரோ அது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தான் நடந்த உண்மைகள். இதை விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து கூறியுள்ளோம். மிக மிக கூர்ந்து கவனித்த குடியரசு தலைவர் எங்கள் கடிதத்தை படித்து பார்த்தார். படித்து முடித்ததும் அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம். வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். கவர்னர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளது. அந்த கடிதத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. ஏனென்றால் இந்த கடிதத்தை முதல்வர், ஜனாதிபதியிடம் கொடுக்க சொல்லி சீலிடப்பட்ட உறையில் எங்களிடம் கொடுக்கப்பட்டது. அது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளே என்ன எழுதி இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விபரம் வருமாறு: கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் என்ன கருத்தை முன் வைத்தீர்கள்? பதில்: இதை மொத்தமாக படித்து பார்த்து சரி என்று என்ன தோன்றுகிறதோ? என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ அதை எடுங்கள் என்று கூறியுள்ளோம். கேள்வி: அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா? பதில்: ஜனாதிபதியை பார்க்கும் முன்பு அவரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியை பார்ப்பது தான் எங்கள் நோக்கம். அவரை பார்த்து விட்டோம். எனவே அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. கேள்வி: ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா? பதில்: இது அரசியலில் நெளிவு சுளிவாக, மிகவும் கவனமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் சொல்ல முடியாது. தேசிய கீதம் பாடும் முன்பு கவர்னர் எழுந்து போனதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேள்வி: கவர்னர் ஏன் தொடர்ந்து தமிழக அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்? பதில்: அவரது நோக்கம் என்பது மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சனாதன கொள்கைகளை புகுத்த வேண்டும் என்பது தான். இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இது பெரியார், அண்ணா, கலைஞரின் தேசம். இதில் யாரும் புதிதாக ஒரு செடியை வளர்த்து விட முடியாது. 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாறான கொள்கைகளை யாரும் திணிக்க முடியாது. கேள்வி: இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்படுமா? பதில்: நிச்சயமாக தி.மு.க. சார்பில் இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − = 19